புத்தகப் பரிசுகள்

 நாஞ்சில் நாடன்
புத்தகங்கள் பரிசளிக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் பரவலாகியுள்ளது. ஒருவகையில் திராவிட இயக்கங்களுக்கு அதில் சிறப்பான பங்கு உண்டு. மாணவப் பருவத்தில், சினிமாவுக்குப் போனாலும், கோயில் திருவிழாவுக்குப் போனாலும், கையில் ஒரு புத்தகம் வைத்து நடப்பது இளைஞருக்கு அலங்காரமாக இருந்தது.
திருமண அன்பளிப்பாகவும் அன்று புத்தகம் வழங்கினார்கள். மணமகனுக்கு, ‘இல்லறம் என்பது நல்லறம்’ எனும் தலைப்பில் ஒரே புத்தகம் ஆறேழு பரிசளிக்கப்பட்டுவிடுவதும் உண்டு. கல்யாணப் பரிசுக்கு என்றே, ‘குழந்தை வளர்ப்பது எப்படி?’, ’30 நாட்களில் சுவையான சமையல்’ எனும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. மாப்பிள்ளைத் தோழர்கள் மணமகனுக்கு, மிக ரகசியமாக செய்முறை விளக்கப் படம் போட்ட புத்தகங்களை, கன்னம் குழிந்த சிரிப்புடன் அன்பளிப்பு செய்தனர். இன்று அந்த வேலைகளைத் திரைப்படப் பாடல் காட்சிகள் இலவசமாகச் செய்துவிடுகின்றன. ஆடை அணிந்த செய்முறைப் பயிற்சிகளை மிக முற்பருவத்தினருக்கும் போதித்துவிடுகிறார்கள்.
பள்ளி மாணவருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மனப்பாடப் போட்டி எனப் போட்டியில் வென்றவர்களுக்குப் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. பெரும்பாலும் மலிவுப் பதிப்பு திருக்குறள் அல்லது பாரதியார் கவிதைப் புத்தகம். திருக்குறள் விற்றே பணக்காரரான பதிப்பாளர் உண்டு. ஒரு காலத்தில் என்னிடம், டாக்டர் மு.வரதராசனார் தெளிவுரை எழுதிய கையடக்கப் புத்தகங்கள் 20-க்கும் மேல் இருந்தன. தாகூர் நூற்றாண்டு வந்தபோது மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் தரப்பட்ட தலைப்பு, ‘தாகூரின் சிறுகதைகள்’. எனக்கு அப்போது தாகூரின் சிறுகதை எனில், அவரது சுருக்கமான கதை என்ற புரிதலே இருந்தது. ஏதோ எழுதினேன் என்றாலும் மூன்றாம் பரிசாக, தாகூரின் ‘கோரா’ முதலாய நூல்கள் கிடைத்தன. அன்று தொடங்கியது எனது புத்தக சேகரம். எனது திருமணத்தின்போது, சுதந்திரப் போராட்டத் தியாகியும், திருவிதாங்கூர் தமிழ்நாடு போராட்ட வீரரும், ‘கன்னியாகுமரி’ வார இதழ் ஆசிரியரும், பேராசிரியர் ந.சஞ்சீவி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆகியோரின் தோழருமான பி.எஸ்.மணி ஒரு புத்தகம் பரிசளித்தார். கே.என்.சிவராஜ பிள்ளை எழுதிய தமிழ்ச் சொல் ஆராய்ச்சி. இன்றும் நான் பேணும் புத்தகங்களில் அதுவும் ஒன்று.
பெற்றோர் தம் மக்களை, பாடப் புத்தகங்கள் மட்டும் படித்து முதல் மதிப்பெண்கள் வாங்கினால் போதும் என்று எண்ணும் மாபெரும் தவறு இன்று எங்கும் நடக்கிறது. பாடப் புத்தகங்களுக்கு வெளியே கற்றுக்கொள்ள மாணவருக்கு ஆயிரம் உண்டு. ‘What they do not teach in Oxford and Cambridge’ என்றே ஒரு ஆங்கிலப் புத்தகம் உண்டு. 40 ஆண்டுகளாகப் புத்தக விற்பனைத் தொழிலில் இருக்கும் கோவை விஜயா பதிப்பக அண்ணாச்சி மு.வேலாயுதம் ஒரு தகவல் சொன்னார், ‘தம் மக்களுக்கு வாசிக்கப் புத்தகம் வாங்கித் தரும் பெற்றோர்கள் கொங்குப் பிரதேசத்தில் அன்று முதலே மிக அதிகம்’ என. இன்றும் பிரதேச வாரியான புத்தக விற்பனையில் கொங்கு மண்டலம் முதலிடம் வகிக்கிறது. பொருளாதார மேம்பாடு ஒரு காரணம் என்றாலும், புத்தகங்கள் வாங்கித் தரும் மனநிலை மிக முக்கியமானது. எனக்குத் தெரிந்து இங்குள்ள தொழிலதிபர் பலர், தமக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கி, தமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பாகத் தருகிறார்கள்.
இன்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது, ‘பிற நாடுகளில் வாழும் கணினிப் பொறியாளர்களில் பெரும்பான்மையோர் கொங்கு மண்டலத்துக்காரர்கள்’ என.
இவற்றை நாம் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
மணமக்களுக்கு எனது புத்தகங்களைப் பரிசளிக்கும் பழக்கம் என்னிடம் உண்டு. நான் படித்து முடித்த நூல்களை என் பிறந்த ஊரின் கிராமக் கிளை நூலகத்துக்கும், என் தம்பி நடத்தும் பள்ளியின் நூலகத்துக்கும், பிற நண்பர்களுக்கும் அவ்வப்போது தந்து விடுவதுண்டு.
பரிசளித்த புத்தகத்தை வேண்டாம் என்று சொன்ன சிறுவனை, சிறுமியை, இதுவரை நான் சந்தித்தது இல்லை. அதற்காக எட்டு வயதுச் சிறுமிக்கு நாம், ‘உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியும்’ பரிசளிக்கக் கூடாது.
நமது வாசிப்புத் தரம் தெரியாமல், சில சமயம், விழாக்களில், வண்ண மினுமினுப்புக் காகிதங்களால் கறாராகப் பொதியப்பட்ட நூல்களைத் தந்துவிடுவார்கள். கோவையில் ஒரு விழாவில் அப்படிச் சில புத்தகங்கள் தந்தனர். விழா முடிந்த உடனேயே அதைப் பிரித்துப் பார்க்கும் வியாதி ஒன்று உண்டு என்னிடம். முன்னாள் பேராசிரியர் எழுதிய சில நூல்கள் பத்தாம் வகுப்பு மாணவன் வாசிக்கத் தகுந்தவை. யாருக்காவது பயன்படட்டும் என்று, விழா அரங்கு வாயிலில் நின்ற கார் ஒன்றின் கூரை மீது, ‘விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு’ என்ற பெருமூச்சுடன் வைத்துவிட்டு நகர்ந்தேன். அது விழா அமைப்பாளர் கண்ணில்பட்டு, அடுத்த நாள் எனது அலுவலகத்துக்கு, எனக்குத் தேவையான புத்தகம் ஒன்று வந்தது.
பொள்ளாச்சியில், கவிஞர் சிற்பி ஆண்டுதோறும் நடத்தும் கவிதை புத்தகப் பரிசளிப்பு விழாவுக்குப் போயிருந்தபோது, ‘உயிர்ப்பின் அதிர்வுகள்’ எனும் ம.இல.தங்கப்பாவின் பாடல்கள் தொகுப்பை வழங்கினார். எனக்குக் கிடைத்த பொக்கிஷம் அது.
இலவசமாகப் புத்தகம் ஒன்று கிடைக்குமே என்று பல புத்தக வெளியீட்டு விழா, அறிமுக விழாக்களுக்குப் போனதுண்டு. 70 ரூபாய் நூலுக்கு சொந்தச் செலவில் சென்னைக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்குப் போய்த் திரும்பிய அன்று எனது முட்டாள்தனம் அர்த்தம் ஆனது.
சில ஆண்டுகள் முன்பு, சென்னைச் சங்கமம் கருத்தரங்கு ஒன்றுக்கு அழைக்கப்பட்டு இருந்தேன். நிகழ்ச்சி முடியும் தறுவாயில், சபாரி போட்ட நூலகத் துறை மேலதிகாரி ஒருவரிடம், சபாரி போட்ட அவரது கீழதிகாரி சில புத்தகங்களைக் கொடுத்துவிட்டுப் போனார். பார்த்ததுமே தெரிந்தது, பதிப்பாளர்கள் மாதிரிக்கு அனுப்பிய புத்தகங்கள் என. உயரதிகாரி மேடைக்கு வந்து, மேடையில் இருந்த எழுத்தாளர்களின் பிரபல்யங்களைப் பொறுத்து, ஆளுக்கு ஒரு நூலை வழங்கினார். இருந்ததில் கெட்டி அட்டை நூல் பிரபஞ்சனுக்கு. அடுத்து அதைவிடச் சற்றுச் சிறிய கெட்டி அட்டை நூல் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு. சாதாக் கட்டு நூல் ஒன்று கவிஞர் கலாப்ரியாவுக்கு. அதைவிடச் சிறியது எனக்கு. கடைசியாக, நண்பர் சுதேசமித்திரனுக்குக் கிடைத்தது எண் சுவடியாக இருந்திருக்கும். ஏனெனில், எனக்குக் கிடைத்தது எட்டாம் வகுப்புக்குப் பாடமாக வைக்கத்தக்க, 16 புள்ளி எழுத்தில் அச்சிடப்பட்ட 80 பக்கப் புத்தகம்.
நூலகத் துறை அதிகாரியே ஆனாலும் அவருக்குப் புத்தகம் பற்றியோ, எழுத்தாளர் பற்றியோ ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை போலும். அதைப் போய் எதற்கு கோவை வரைக்கும் அநாவசியமாகச் சுமக்க வேண்டும் என்று மேடையிலேயே வைத்துவிட்டு இறங்கினேன். கீழே நின்றிருந்த அமைப்பாள நண்பர் சொன்னார், ‘ஆனாலும் உங்களுக்குஎல்லாம் லொள்ளு ரொம்ப அதிகம்யா’. அது திமிரல்ல, படைப்பாளச் செம்மை, செருக்கு!
சில சமயம் ஏற்கெனவே வாங்கிவிட்ட நல்ல புத்தகத்தை, கல்லூரித் தமிழ் மன்றங்களில் மறுபடியும் தந்துவிடுவார்கள். நான் சத்தமில்லாமல் விஜயா பதிப்பகத்து சிதம்பரத்திடம் சொல்லி மாற்றிக்கொள்வேன். சில கல்லூரி நண்பர்கள், புத்தகம் வாங்கும் முன் கடையில் நின்று நம்மிடம் கேட்பார்கள் செல்பேசியில். அவர்களின் செலவுத் திட்டம் தெரிந்து என்னிடம் இல்லாத புதிய வரத்து ஒன்றைச் சொல்ல வாய்ப்புக் கிடைக்கும்.
இன்று தமிழக அரசின் பரிந்துரை ஒன்று உள்ளது, அரசு விழாக்களில் மாலை அணிவிக்காது, துண்டு போடாது, புத்தகங்கள் பரிசளிக்குமாறு. அங்கும் புத்தகங்கள் துண்டுகள் போல் சுழன்று கைமாறும் பண்பு வந்துவிடலாகாது என்பது என் பிரார்த்தனை.
சமீப காலமாகப் புத்தக வாசிப்பு, புத்தக விற்பனை, புத்தக வெளியீடு யாவும் தரத்தில் மேல் நோக்கி உள்ளது என்பது நல்ல செய்தி. அது போல் ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சி விற்பனை சென்னைக்கு அடுத்தபடி ஈரோடு என்பதும் மதுரை முன்னேறி வருகிறது என்பதுவும் நல்ல செய்திகள்.
கண்காட்சிகளின் ஒன்றிரண்டு புத்தகங்களை மாரோடு சேர்த்து அணைத்து நடக்கும் சிறுவரைக் காண எனக்குப் பெருமிதமாக இருக்கும். எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் பெருகும். சென்னையில் ‘காலச்சுவடு’ நடத்திய ‘தமிழினி-2000’ மாநாட்டில், பல ஆண்டுகள் சென்று மறுபதிப்பு கண்ட எனது நாவல் ‘மாமிசப் படைப்பு’, கனடா வாசகர் ஒருவரால் 20 படிகள் வாங்கிச் செல்லப்பட்டதை, கண்களில் நீர் மல்க நான் கண்டு நின்றேன்.
குழந்தைகள், சிறுவர் புத்தகம் வாங்குவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். புத்தகங்களைக் கிழிப்பதையும் பொருட்படுத்தலாகாது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல! இந்தியாவின் தற்போதைய கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்த மெக்காலே பிரபு, தனது சிறு வயதில் பெற்றோரின் கண்டிப்புக்கு எதிராக மறைத்துவைத்து நாவல் வாசித்ததாகக் குறிப்பிடுகிறார். இன்றும் பல வீடுகளில் நிலைமை அதுதான். நல்ல பெற்றோருக்கு அடையாளம், பிள்ளைகளை வாசிக்கும்படி ஊக்குவித்தல். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, வரலாறு, பூகோளம், உயிரியல், விலங்கியல் என வாசிப்பது வேறு, பாடப் புத்தகங்கள் வாசிப்பது வேறு.
இன்னும் கிராமங்களில் பொரிகடலை வாங்கி வந்த தாளைக் கண் இடுக்கிப் படிக்கும் கிழவிகள் உண்டு. பலகாரம் பொதிந்து வந்த தாளை மிதித்தாலும் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்பவர்களும் உண்டு. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காங்கிரஸ் நூலகத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கவிதை வரிகளைக் கண்டுவந்து சொன்னார் கவிஞர் சிற்பி. ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு’ எனும் ஒளவையின் வரிகள் அவை.
நெடிய வழி நடந்து, களைத்து, இரவில் கல் மண்டபம் ஒன்றில் கண் துஞ்ச ஒடுங்கிய ஒளவையை, மண்டபத்தில் வாழ்ந்திருந்த பேய் ஒன்று அச்சுறுத்தியது. ஒளவை சொன்னாள் பேயிடம்,
‘வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் – பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோ மற்றெற்று.’
இருமுறை எடுத்துச் சொன்னபோதும் வெண்பாவின் பொருள் தெரியாமல் நின்றவனை, தெளிவான ஓலையில் கண்ணால் பார்த்துச் செய்தியைத் தன் கையால் எழுத அறியாதவனை, பிறர் நகைக்கப் பெண்பாவி பெற்றாளே, பேயே! அவளைப் போய் எற்றோ எற்றென்று எற்று. வழிபாட்டு அறை வைத்து, ஆனால் நூலக அறை வைக்காமல் வீடு கட்டும் மானுடரை ஒளவை என்ன சொல்வாளோ?
புத்தகங்கள் இலவசமாகக் கொடுக்கலாம். அன்பளிப்பாகத் தரலாம். ஆனால், இரவலாக யாருக்கும் தராதீர்கள். ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று உண்டு- ‘பெண்டாட்டியை வேண்டுமானால் இரவல் கொடு, ஆனால், புத்தகங்களைக் கொடாதே’ என்று. முன்பு உத்யோகம் புருஷ லட்சணம் என்பார்கள். இன்று புத்தகங்கள் மானுட லட்சணம் எனலாம்.
புத்தகம் எழுதியவனிடமே, உங்கள் புத்தகத்தைத் தாருங்கள், படித்துவிட்டுத் திரும்பத் தருகிறேன்’ எனச் சொல்லும் பாவிகளும் உண்டு.
எதையாவது வாசி என்பது எனது கொள்கை. கண்டது கற்றுப் பண்டிதனாகலாம். எனது வீட்டுக்கு வரும் குழந்தைகள், புத்தக அடுக்குகளைச் சரித்துப் போடும், பிரித்துப் பார்க்கும், கலைத்துவைக்கும், மீண்டும் அடுக்கும். ஆனால், இதுவரை கிழித்தது கிடையாது. ஆனால், குழந்தை புத்தகத்தைத் தொட்டதும், ‘கீழே வை, கீழே வை, கிழிச்சிராதே’ என்று புத்தகத்தைத் தொடுவது பாம்பைத் தொடுவது போலக் கருதும் தாய்மார் உண்டு. கிழித்தால் என்ன கெட்டுப்போகும்? செருப்பு அறாதா, ஆடை கிழியாதா, பாத்திரம் உடையாதா?
சிவபெருமான் ஊழிக் கால முடிவில், எல்லாம் அழிந்து போன பிறகு, வாசிப்பதற்குத் திருவாசகம் கையடக்கப் பிரதி ஒன்றைச் சேமித்துவைத்தானாம். நாம் ஓய்வு பெறும் காலத்துக்கு என்று எதைச் சேமித்துவைக்கலாம்? நீரிழிவையும், ரத்த அழுத்தத்தையும், இதய நோயையும், கை கால் மூட்டு வலியையுமா?
திராவிட இயக்கத் தலைவர்களில் கி.வீரமணி, முரசொலி மாறன், காளிமுத்து, வைகோ போன்றவர்கள் புத்தகப் பிரியர்கள் என்பார். சபாநாயகராக இருந்த காளிமுத்து அவர்கள், கோவை வந்த பல சந்தர்ப்பங்களில் அவரை நான் சந்தித்தது உண்டு. நேற்று வெளியான புத்தகத்தை அவர் இன்று வாசித்து முடித்திருப்பார். கம்பன் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தபோது, நான் பாடம் கேட்ட, ஆனால் கைவசம் இல்லாத, வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை பற்றிச் சொன்னேன். தன்னிடம் இரண்டு செட் இருப்பதாகவும் ஒன்று எனக்கு அனுப்புவதாகவும் சொன்னார். காலம் என்னிடம் அந்த உரையைக் கொண்டுவந்து சேர்க்கத் தவறிப்போயிற்று!
(விகடன் பிரசுரத்தின் ”தீதும் நன்றும்” புத்தகத்திலிருந்து)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to புத்தகப் பரிசுகள்

  1. salemdeva சொல்கிறார்:

    காளிமுத்து மிகச்சிறந்த பேச்சாளர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..!! 😦

  2. m.murali சொல்கிறார்:

    எங்களது பள்ளிகூடத்தில் தினமும் தவறாமல் வரும் மாணவ மணிகளுக்கு கையடக்க திருக்குறள் பரிசு.
    நான் ஏராளமான உருஷ்ய மொழி பெயர்ப்பு புத்தகங்களை பரிசு வாங்கி உள்ளேன். பொழுது போக்கு பௌதிகம்,
    பொழுது போக்கு வானவியல், 107 வேதியல் கதைகள் போன்றன. ஹிக்கின்பதமஸ் சிறந்த அறிவியல் புத்தகங்களை
    வெளியிட்டு இருக்கின்றன. நூலகத்தில் ஒரே மூச்சில் வாங்கி படித்து விடுவது உண்டு. ஒரு ருபாய் புத்தகங்கள் அவை. (1973 – 76 )
    அறிவியல் வரலாறு, கண்ணுக்கு புலப்படும் மற்றும் புலப்பட கதிர்கள் என இருபதுக்கு மேல் பட்ட புத்தகங்கள்.
    தற்போது பதிப்பில் இல்லையோ என எண்ணுகிறேன்.

    தமிழ் அறிவியல் புத்தகங்களுக்கு மனதில் தனி இடம் உண்டு
    முரளி

  3. Kannan சொல்கிறார்:

    நாஞ்சில் நாடன் சுட்டிக்காட்டிய ‘திருக்குறள் உரைக்கொத்து’ தேடப் போய், பொருளதிகாரம் மட்டுமே கிடைத்ததால் அதனுடன், என் தந்தை, கோவை விஜயா பதிப்பகத்தில் இருந்து வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் விளக்கங்களுடன் திருக்குறள் பரிமேலழகர் உரை வாங்கி அனுப்பினார். அதைப்பற்றி வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சிலாகித்து எழுதுமளவிற்கு அற்புதமான நூல். திருக்குறளை Facebook/Twitterல்ஆங்கில மொழியாக்கம் செய்யும் எனது முயற்சிக்குப் பெரிதும் உதவுகிறது. ஒரு வகையில் அந்த நூலுக்கு இட்டுச்சென்ற நாஞ்சில் நாடனுக்கு நன்றி.

    எனக்கும் வை.மு.கோ.வின் கம்ப ராமாயண உரை கிடைத்தால் உடனே அள்ளிக்கொள்வேன்.

  4. Jay சொல்கிறார்:

    Idhu oru nalla muyarchi

பின்னூட்டமொன்றை இடுக