எது கவிதை?

நாஞ்சில் நாடன்

 

மொழியில் மூத்தது

கம்பனுக்கு சான்றோர் கவி கோதாவரி

கவிமணிக்கு உள்ளத்துள்ளதும் இன்ப ஊற்றெடுப்பதும்

சரியான சொற்களை சரியான பொருளில்

சரியாக அடுக்கினால் கவியென்றுரைத்தனர்

 

அடுக்குவது கட்டுவது செதுக்குவது

வடிப்பது வர்ணம் தீட்டுவது

உருக்கி வார்ப்பது கவியெனப் படுமோ?

 

மரபெனப் பட்டது உடைத்துப் பார்த்தால்

ஒன்றமே இலாத அப்பளம் என்றனர்

நவ கவிதை பூரண் போளியா

அடைப்பம் வைத்த இலைப்பணியாரமா

இங்கும் உடைத்துப் பார்த்தால்

நாலில் மூன்று பொக்காய்ப் போனது

 

கவிதை என்பது

சொற்களைக் காட்டி மிரட்டுவதல்ல

தத்துவச் சாயம் பூசுவதல்ல

கூலி அரசியல் கோஷம் அல்ல

பதவியில் இருப்பவர் கால்கை அமுக்கிப்

பன்னாட்டரங்கில் படிப்பதுமல்ல

 

எனினும் கவிதை சீவித்திருந்தது

 

கவிதை என்றன் கைவாள்

கண்டங்கள் தாண்டிப் பாயும் கணை

பேரரசுகள் மகுடம் சாய்க்கும்

அறமும் பாடும் திறமும் பாடும்

என்ற நின்ற காலம் இருந்தது

 

இன்றதன் பாடு தாளம் படாது தறியும் படாது

செல்வந்தர்களின் சீலைப் பேனாய்

அதிகாரத்தை அணைந்து நிற்க

அரசியலார்க்கு அடைப்பம் தாங்க

சினிமாக்காரர் கைத்தடியாக

ஓசியில் குடிக்க பெண்கள் பொறுக்க

கவிதை என்பது கடவுச் சீட்டு

 

வேற்றுப் புலங்களில்

கவியெனப்பட்ட பொருநர் உண்டு

ஈண்டும் சிற்சில சூரர் உண்டு

கவிதை அவர்க்கு வீசும் அரிவாள்

சார்ங்கம் உதைத்த சரமழை

பட்டையாய்க் கட்டிய சுருட்டுவாள்

அவர்தம் திசையைத் தொழுதலும் சாலும்

காலடி மண்ணைத் தரித்தலும் ஆகும்

 

ஆண்மை துறந்த அற்பக் கவிதை

கிழட்டுக்குறிபோல் தொய்ந்து கிடப்பது

 

அரசுத் துறைகளின் வெளிவராந்தாவில்

தமிழ்த்துறைகளின் தாழ்வார வெளியில்

தனியார் நிறுவன வரவேற்பறையில்

பாடசாலக் கரும்பலகை முன்

சினிமாக் கம்பனி கோரம் பாயில்

செத்த பாம்பாய் கிடந்தது கவிதை

 

நல்ல கவிதை எப்படி நடக்கும்

 

கொடுமைக்கெதிராய் ஆவேசம்

விடுதலை வேட்டல்

ஒடுக்கப்பட்டவர் ஓங்கிய முழக்கம்

வயிற்றுக் கொடுந் தீ

கவிதை என்பது காமச் சிகரம்

காதலின் கிளர்ச்சி அழகின் ஈர்ப்பு

பால்குடி மாறா மதலை வாசம்

கலைகளின் மே நிலை

அன்பின் நீட்சி

இறையின் மாட்சி

அறம்

மறம்

 

மொழியின் வறுமை கவிதையில் கண்படும்

நோயின் கூறு இனத்தின் அழிவு

கவிதை தோற்பது மானுடம் தோற்பது

 

தம்முயிர் பாதி எரிந்தது பார்த்தும்

இங்கே கவிதை

வாளாவிருந்தது

சாப்பிள்ளையாகத் தோற்றும் கவிதை

சுமையுமாகிப் போகும் விரைவில்

அதுவே எமது

அச்சமனதின் ஆணிவேராகும்

0

  

(நாஞ்சில் நாடனின் பச்சை நாயகி கவிதை தொகுப்பிலிருந்து)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எது கவிதை?

  1. கருணேஷ் க ஸ்ரீகாந்த் சொல்கிறார்:

    அவசியம் கவிதை ஆக்குவோன் அறிவுக்குகந்த
    அவ் வசியம் மிக்க வரிகளைக் கண்டேன்.
    பாடு பொருளை பாடுக பொருளாய் என்று
    புடைப்புக் காட்டி புனந்தீர் கவிதை.

    சுருள் கத்தியும், சுத்தியும் அரிவாளும்
    பொருள் நிறைக் கவிதையை போக்கிரியாக்கும்
    இருள் தனைப் போக்கி இன்பம் வழங்க
    அருள் நிறை வாசகம் ஆயிரம் தமிழில்

    கடிதோச்சி மெல்ல எறிதல் கவிதை மரபு
    இடித்துரைத்தல் என்பது இயலாமைப் பண்பு
    கவிதை என்பது காமச் சிகரம் என்பவரே
    காலப் போக்கில் காமச்சி கரம் புகாது – காப்பாற்றுங்கள்.

    கருணேஷ் க ஸ்ரீகாந்த்

  2. ஞானசேகர் சொல்கிறார்:

    கவிதை தோற்பது… மானிடம் தோற்பது….
    கவிதையை தன் சொத்தாக சொந்தமாக்கி கொண்ட… உரிமை ஒளிரும்… வரிகள்… வாரிகட்டிக்கொண்டு… இறங்கி விரட்டும்… அறிவுச்செருக்கு…

    வார்த்தைகளின் பொருள்கள் மட்டுமன்றி…. வீரவிளையாட்டு நடை..
    ஆழ்ந்த பொதிவுகளின்றி… வெறும் வார்த்தை வீச்சு எப்படி கவிதை எனக் கொள்வது…?
    பொதிவு வளம் வார்த்தை வித்தகம்…
    நடை….
    இவையனைத்திலும்…
    இது ஒரு இலக்கண கவிதை…

    தொய்ந்து போகாது தொடரோட்டம்…

    இது போன்ற கவிதைகளே…
    வருங்காலத்தை…
    வளமாக்கும்….
    கவிதை பட்டறை…

    கவிதை….. ஆன்மாக்களில்
    கூடுவிட்டு கூடு பாயும்… சித்தர்கலை
    சுயம் கொண்டது….

    உங்கள் ஆன்மா நிரப்பும் பல்வேறு பேனாக்களை …

    ஞானா….

பின்னூட்டமொன்றை இடுக