நாஞ்சில்நாடன் ”பந்தா”

தீதும் நன்றும்” (11) பந்தா

‘பந்தாஎன்றொரு சொல் தமிழ் மக்கள் நாவில் வழங்குகிறது இன்று. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்து ஆய்வறிஞர், தூய தமிழ்ச் சொல்லாக்க அகர முதலிகள் துறைத் தலைவர், பேராசிரியர் ப.அருளி அவர்கள், தமது அயற்சொல் அகராதியில் பந்தா Panthah எனும் சொல்லின் வேர்ச் சொல் சம்ஸ்கிருதம் என்றும், அதன் பொருள் வழி, வழிமுறை, அடம்ப வீம்பு என்றும் குறிக்கிறார்.

நாம் தற்போது பந்தா எனும் சொல்லை ஆடம்பரம், பகட்டு, அலட்டல் எனும் பொருட்களில் கையாள்கிறோம். நாவல் எழுத ஆரம்பித்தபோது, 1975ல் சென்னையில் என்னில் மூத்த நாவலாசிரியர் ஒருவரைத் தேடிப் போய்ச் சந்தித்தேன். நாவல் எழுதுவது பற்றிப் பேச்சு வந்தபோது அவர் சொன்னார், ”நான் எனது நாவலின் கடைசி வரியை, நாவல் எழுதத் துவங்கும்போதே தீர்மானித்துவிடுவேன்என்று. பிறகு புரிந்தது, அது சும்மா எழுத்தாளர் பந்தாஎன்று!

இந்திய அரசின் ஆட்சிப் பணிகளில் இருக்கும் அதிகாரிகள், கருத்தரங்குகளில் கலந்துகொள்ளும்போது, அதே மேடையில் பிற துறை அறிஞர்களும் உட்கார்ந் திருப்பார்கள். எல்லோருக்குமே மாலை, பூச்செண்டு அல்லது சால்வை உண்டு. மற்ற எல்லோரும் முன்னால் இருக்கும் மேசை மீது வைப்பார்கள்; அல்லது, தமது நாற்காலியின் பின்னால் போடுவார்கள். ஆனால், அதிகாரிக்குப் போட்ட பின், ‘வாம்மா மின்னல்என்றழைத்தவுடன் ஓடி வரும் பெண் போல, முன் வரிசையில் இருந்து உதவியாளர் ஒருவர் கிடுகிடுவென வந்து அதை வாங்கிப் போவார். அது போல், கருத்தரங்கில் பேச வந்தவருக்கெல்லாம் சுத்தமான தண்ணீர்ப் போத்தல்கள் வைக்கப்பட்டு இருந்தாலும், அதிகாரிக்கு நாவறட்சி எடுத்தவுடன் சற்றே கடைக்கண் பார்ப்பார். உதவியாளர் தண்ணீர்ப் போத்தலுடன் ஓடோடி வருவார். அதைக் கொடுக் கும்போதும் குடித்த பின் வாங்கும்போதும் உதவியாளரின் பணிவையும் மெய்ப்பாடு களையும் காண வேடிக்கையாக இருக்கும். நினைத்துக்கொள்வோம், அதிகாரிகள் தன்னலமற்ற, உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்த தேச சேவையில் இருப்பவர்கள். அவர்கள் உயிரும் ஆரோக்கியமும் பல்வழியாலும் பேணப்படவேண்டிய ஒன்று தான்!

சில முக்கியப் புள்ளிகள் விழாவில் பங்குபெற வந்தால், விலைமதிப்பற்ற வெளி நாட்டுக் கார், அதிவேகமுடன் அரங்கின் முகப்பு வாசலில் வந்து நிற்கும். ஓட்டுநர் இறங்கி, காரைச் சுற்றிக்கொண்டு ஓடி வந்து கதவைத் திறந்து பிடித்துக்கொண்டு நின்றபிறகே பிரமுகர் இறங்குவார். விழா அமைப்பாளர், ‘நீ இறங்காவிடின் நிம்மதி ஏது?’ என்று பாடிக்கொண்டு நிற்பார். விழாவுக்கு வரும் நம் போன்ற சாதாரண மக்களுக்கு நடக்க இடைஞ்சலாக, விழா முடிந்து போகும்வரை, பிரமுகரின் கார் அங்கேயே நிற்கும், பந்தாவாக!

அதிகாரிகள் சஃபாரி சூட்களில் பெரும்பாலும் வருவார்கள். அவர்களுக்கென்றே பந்தாவான சாம்பல், கருநீலம், தவிடு, வெள்ளை நிறங்களில் சூட் துணிகள் தயாரிக்கப்படுகின்றன. ஓய்வு பெற்ற பிறகும் அவர்கள் சஃபாரிகளைத் துறப்பதில்லை. சவம், சீக்கிரம் கிழிந்தும் தொலையாது! முன்பு இந்தி சினிமா ஒன்றில், வெள்ளை சஃபாரியில் அதிகாரி ஒருவர் வெள்ளை காரில் வந்து இறங்கி, ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பிப்பார். பக்கத்தில் நின்ற சிரிப்பு நடிகர், துணை சிரிப்பு நடிகரிடம் சொல்வார், ‘ஸாலா அங்க்ரேஜி பி போல்த்தா ஹை. ஜரூர் ஸ்மக்ளர் ஹோ காஎன்று. தமிழில் டப் செய்தால்… ‘மச்சான், ஆங்கிலத்திலும் பேசுகிறான். கட்டாயம் கடத்தல்காரனாக இருப்பான்!

வெள்ளை சஃபாரிக்கு அன்று அத்தனை நல்ல பெயர்!

சமீபத்தில், உயரதிகாரி ஒருவரைத் திருமண வீடொன்றில் சந்தித்தேன். தாலிக்கட்டு முடிந்ததும் கவர் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார். சாப்பிடலியா சார்?’ என்றேன். ஆயிரம் பேரோட எப்படிச் சேர்ந்து சாப்பிடறது?’ என்றார். சரிதான்! இந்நாட்டு மன்னர்களை ஆள்கிற தன்னாட்டு மன்னர்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

தனியார் துறை அதிகாரிகளும் வெகு பந்தாஉடையவர்களே! பின்னால் கை நீட்டினால் எடுக்கும் தோதில் இருந்த தண்ணீர் நிறைந்த கண்ணாடி டம்ளரை எடுக்க, மணி அடித்து ஊழியரை அழைத்ததைக் கண்டேன். ஓர் அலுவலகத்தில் எதிரே உட்கார நாற்காலி போடாத அதிகாரிகள் உண்டு. உணவு பரிமாற வேண்டும், வாழைப்பழம் உரித்து நீட்ட வேண்டும், சாய் கோப்பையை எடுத்துத் தர வேண்டும்.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அலங்காரம் முடிந்ததும், வடபத்ர சாயி எனும் பெயருள்ள பெருமாளுக்கு,

‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை
,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை‘ என்று

ஆண்டாள் பாடும் தேவாதி தேவனுக்குப் பட்டுத் துணியால் முகம் ஒற்றி, விசிறியால் விசிறி, கண்ணாடியும் காட்டுவதை இன்றும் நீங்கள் காணலாம். இது ஓர் ஒப்பீடு!

அகமதாபாத்தில் முன்பு நான் பணி செய்த நிறுவனத்தில், மேலாளர்கள் மாநாடு நடந்துகொண்டு இருந்தது. இடை வேளைக்கு ஆடம்பர விடுதி ஒன்றில் இருந்து மதிய உணவு வந்திருந்தது. சூப், ஸ்டார்ட்டர், சாலட் எனத் தொடங்கி டெஸர்ட்ஸ் வரை வக்கணையான பரத்தல். பஃபே லஞ்ச் ஆதலால், அக்கம் பக்கமாக முப்பது நாற்பது பேர் நின்று சூப் பருக ஆரம்பித் திருந்தோம். ஒரு கரண்டி பருகிய எம்.டி. சொன்னார் முகம் சுளித்துக்கொண்டு, ச்சீ! குத்தா பி நை பீயேங்காஎன்று. நாயும் குடிக்காது இதைஎன்பது பொருள். சுற்றி நின்றவர் சேர்ந்திசைப் பாடல் போல் ஆமோதித்தனர். அன்று இரண்டு கிண்ணங்கள் பருகினேன், ‘நாயினும் மேலானவன்என்று நான் எப்போதுமே என்னைக் கருதி இராததால்.

அதிகாரிகள் பந்தாவுடன் செயல்படுவதைக் கேவலப்படுத்துவது போலிருக்கும் அரசியல்வாதியின் பந்தா. நாட்டுப்புறத்தில் பழமொழி ஒன்றுண்டு அற்பனுக்குப் பவிசு வந்தால், அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்’.

வெளிநாடு போன இந்திய அமைச்சர் ஒருவர், குளிர் கருதி சாக்ஸ், ஷூ எல்லாம் அணியும்போது, இடம் வலம் என்று பார்த்து வைத்த காலுறைகளை மாற்றிக் கலைத்து வைத்துவிட்டான் எனக் கடுமையாகக் கோபித்துக்கொண்டாராம் தன் உதவியாளரை.

சமீபத்தில், அமைச்சர் கலந்துகொண்ட விழா. பேசுவதற்கு முன்பு அவருக்கு ஏதோ குறிப்பெழுத வேண்டும். ஏதேனும் தத்துவ, இலக்கிய, பண்பாட்டு ஞானத்தெறிப்பாக இருக்கும். சட்டைப்பையில் இருந்து பேனாவை எடுத்துப் பின்னால் காட்டினார். ஏதோ குறிப்பு உணர்த்துவதற்காக இருக்கலாம் என்று எண்ணினர் அவையோர். பின்னால் நின்ற சீர்நெடுமாற உதவியாளர், பேனாவின் மூடியைத் திறந்து கொடுத்தார். எழுதி முடித்த பின், மறுபடியும் பேனாவைப் பின்னால் நீட்டினார். உதவியாளர் மூடிக் கொடுக்க, வாங்கி சட்டையில் செருகிக்கொண்டார். எனக்கு விசித்திரமான கற்பனை ஒன்று தோன்றியது. அதை எழுதுவது நியாயமல்ல. அவரவர் மனோ லயம் போலக் கற்பனை செய்து ஆபாசமோ, அருவருப்போ, அருசியோ அடைந்துகொள்ளுங்கள்.

பந்தாவில் அதிகாரிகளை அடித்து உப்புத்தொட்டு விழுங் குகிறவர்கள் அரசியல்வாதிகள் என்றால், சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகளை, ‘மலை விழுங்கும் மகாதேவனுக்கு கதவு ஒரு பப்படம்எனக் கருதுகிறவர்கள். தோசையைக்கூடத் தட்டில் பிய்த்துப்போட்டால்தான் சாப்பிடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தயவுசெய்து, நான் குழந்தை நட்சத்திரங்களைக் குறிப்பிடுகிறேன் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். நாம் எவ்விதம் விமர்சனம் செய்தாலும், ஆறரைக் கோடித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கிற மாநில முதலமைச்சர் அமரும் மேடையில், படுக்கை அறை உடையில் வந்து அமர்கிற துணிச்சல் சாதாரணமான பந்தாவா?

சில கவிஞர்களுக்குப் பட்டு ஜிப்பா, பட்டு வேட்டி அணிந்தால் மட்டுமே கவிதை வரும். கரடுமுரடு கதர் ஜிப்பா, ஜோல்னாப் பை எழுத்தாள பந்தா. கர்னாடக இசைப் பாடகர்களோ 25 செ.மீ. அகல கரை வேட்டியும் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் குர்தாவும் அணிந்துதான் மேடையில் அமர் கிறார்கள்.

வித்வான் ல.சண்முகசுந்தரம், ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரின் அணுக்கத் தொண்டர். முதலமைச்சராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் குற்றாலம் வந்து டிகே.சியுடன் தங்க நேரும்போது, அவரது அறையில் வித்வான் ல.ச. படுத்துக்கொள்வராம். விடிந்து எழுந்து செலவாதிக்குப் போய் வருமுன், ராஜாஜி தன் படுக்கையையும் அவர் படுக்கையையும் சுற்றி வைத்துவிடுவாராம். இத்தனைக்கும் வித்வான் ல.ச. பல ஆண்டுகள் இளையவர். அவருடன் நண்பர்கள் மரபின் மைந்தன் முத்தையாவும் பாரதி அறநிலை இரவீந்திரனும் உரையாடியபோது நானும் உடன் இருந்தேன்.

மகாத்மா காந்தியின் சீடர்கள் தினமும் தமது உடைகளைத் தாமே துவைத்து உலர்த்திக்கொண்டவர்கள். கழிவுகளைத் தலை மேல் சுமந்து சென்ற ஆச்சார்ய வினோபா பாவேயை சபர்மதி ஆசிரமத்தில் கண்ட மகாத்மா, ‘குருவாக வந்த சீடன்என்றாராம்.

பந்தாவுக்கு எதிர்ச்சொல் என்னவாக இருக்கும்? எளிமை, இயல்பு அடக்கம்!

கவிரயரங்குகளில் பிரபலங்கள் கவி சொல்லும்போது, சிற்றரசர்கள் சிரக்கம்பமும் கரவொலியும் வன்சிரிப்பும் செய்வார்கள். ஒளவை சொல்கிறாள்

‘விரகர் இருவர் புகழ்ந்திடவும் வேண்டும்
விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் அரை அதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று!‘

இதில் விரகர்என்பதற்கு அறிவுடை யார் என்று பொருள். கவித்தென்றல் கா.சு.மணியன் கல்கத்தா தமிழ்மன்றச் செயலாளராக இருந்தவர். கவியரசு கண்ணதாசனால், ‘இவன் நெஞ்சத்தில் கருவுற்றால், நிமிடத்தில் பெற்றெடுப்பாள்என்று பாராட்டப் பெற்றவர்.

தமிழ்வங்காளப் பண்பாட்டு நிகழ்ச்சிக்கு, பதவி ஏற்று ஒரு வாரமே ஆகியிருந்த கல்வி அமைச்சர் பார்த்தா தேசிறப்பு விருந்தினர். மாலை ஐந்தரை மணிக்கு விழா துவங்க வேண்டும். எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஐந்தே முக்காலுக்கு செயலாளர் தோளைத் தொடுகிறது ஒரு விரல்.

ஏன் இன்னும் விழா துவங்கவில்லை?’

அமைச்சரை எதிர்பார்த்துக் காத்து நிற்கிறோம்!

தோளைத் தொட்டுக் கேட்டவர் சொல்கிறார், ‘நான் வந்து அரை மணி நேரம் ஆயிற்று என்று.

விழா முடிந்ததும், காரில் கொண்டுவிடுகிறோம் என்றதற்கு, பக்கத்துத் தெருவில் தனது நண்பர் இருப்பதாகச் சொல்லி நடந்து போனாராம். அவர் காந்தியின் சீடரல்ல; ஆனால், காரல் மார்க்ஸின் சீடர்.

சமீபத்தில் படைப்பாளிகளும் தமிழறிஞர்களும் பார்வையாளச் சான்றோரும் காத்துக்கொண்டிருக்க, குறித்த நேரம் தாண்டி, ஒன்றே முக்கால் மணி நேரம் தாமதமாக வந்தா ராம் மூத்த அமைச்சர் ஒருவர். பல சமயங்களில் பள்ளிச் சிறுவர், மைதானத்தில் வெயிலில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, காலை ஒன்பது மணிக்கு வரவேண்டிய அமைச்சர் மதியம் ஒரு மணிக்கு வந்ததுண்டு. அமைச்சர் வந்து கொடி ஏற்றாமல் விழாவைத் துவங்குவது எங்ஙனம்?

அவர்களுக்கு எனில் விமானம், ரயில் தாமதமாக வரும்; போக்குவரத்து நெரிசல் இருக்கும்; தவிர்க்க முடியாத அலுவல்கள் இருக்கும்; வயிற்றுக்கடுப்பு இருக்கும். மரபு கருதி கூட ஒரு வருத்தம் சொல்ல மாட்டார்கள்.

எனது ஆச்சர்யம், ஆறு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி, ஏழு மணிக்கும் ஆரம்பிக்கப்படாவிட்டால், ஏன் எழுந்து போகாமல், மானங்கெட்டுப்போய் எல்லோரும் உட்கார்ந்திருக்க வேண்டும்? தெய்வ தரிசனத்துக்கான காத் திருப்பா? வெளிநடக்கும் வீரம் நமக்கு என்று வரும்? அல்லது பந்தா காட்டுவதும், பந்தாவுக்குப் பயப்படுதலுமே தீரத் தமிழ்க் குணமா?

திருவள்ளுவர் சொல்கிறார், ‘செய்க பொருள்என்றும், பகைவர்களின் செருக்கை அறுக்க அதைவிடக் கூரிய ஆயுதம் வேறு இல்லை என்றும்!

எனில், பந்தாவை அறுக்கும் கூரிய ஆயுதம் எது? பதவி இழத்தல்? மார்க்கெட் இழத்தல்? ஓய்வு பெறுதல்? மக்கள் செல்வாக்கு இழத்தல்? தீராத் தரித்திரம்? நாம் வாழ்த்தவும் இல்லை, சாபமும் தரவில்லை. பந்தாக்காரர்களுக்கே அறிவின் வெளிச்சத்தில் விடியட்டும்!

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to நாஞ்சில்நாடன் ”பந்தா”

  1. M.Sigappi சொல்கிறார்:

    What you are telling is 100% true only. Not only the I.A.S. I.P.S. officers even the clerk in the govt office do the same thing.

  2. bogan சொல்கிறார்:

    அண்டை மாநிலம் கேரளாவில் இதெல்லாம் குறைவாக இருந்தது.ஆனால் அங்கும் தமிழ்நாட்டைப் பார்த்து ‘திருந்தி’விட்டது போல் தெரிகிறது.சமீபத்தில் வெளியான மோகன்லால படத்துக்கு திருவனந்தபுரம் சாலைகளை மறித்துக் கொண்டு செண்டை சகிதம் போனார்கள்

    • SiSulthan சொல்கிறார்:

      கேரளா மாநிலத்தவரில் பெரும்பான்மையோர் எவ்வளவுதான் தாங்கள் உயர்ந்தவர் என்று பேசிக்கொண்டாலும் , காட்டிக்கொண்டாலும், அது அரசியல்வாதி முதல் நடிகர், மற்றும் பாமரர்வரை – அவர்களின் அடிமனதில் தாங்கள் மலையாளிகள் – தமிழர்களுக்கு பலபடி கீழேதான் என்ற தாழ்வுமனப்பான்மை தேங்கி கிடக்கிறது.
      அதனால் தமிழர்கள் போல செய்து நாங்கள் உங்களைவிட மேல் என்று காட்டிகொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பயன்படுத்துகிறார்கள்.
      இங்கே காலாவதியானதெல்லாம் அங்கே விலைபோகும். ஆனாலும் தங்களின் தாழ்வுமனப்பான்மையை மறைக்க சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நம்மை மட்டம்தட்டுவார்கள்.

  3. மாரிமுத்து சொல்கிறார்:

    ஆய்வு, அங்கதம், அனுபவம், அறிவுரை அனைத்தும் கலந்த அற்புதமான அறச்சீற்ற கட்டுரை

பின்னூட்டமொன்றை இடுக