பெயரணிதல்

நாஞ்சில் நாடன்
தமிழ் இலக்கணம், காரணப் பெயர் இடுகுறிப் பெயர் என இரண்டைப் பேசுகிறது. ஆகுலப்பெயர் வேறென்றும் ஆகாத பெயர் அதனினும் வேறென்றும் அறிக. கருப்பன்,வெள்ளச்சி,செவலை,மயிலை,நாற்காலி,நெட்டையன்,தடியன் எனபன காரணப் பெயர். தேக்கு ,தென்னை,பசு,யானை,மரம்,பானை போன்றவை இடுகுறிப்பெயர்கள்.
செண்பகம் என்றொரு பறவையைப் பெயர் சொல்லி அழைக்கிறோம்.சில பகுதிகளில் செம்போத்துஎன்பார்கள். எனக்கு செண்பகத்தைப் பார்த்தால் இனம் தெரியும்.
செண்பகம் எனும் சொல்மனத்துள் ஒருகாட்சியை நிறுவுகிறது. சொல் இல்லையெனில் காட்சி உண்டா என்பது தத்துவார்த்தமான கேள்வி. நானதற்குள் நுழையப் பிரியப்படவில்லை. எனது கேள்வி, செண்பகத்திற்குத் தெரியுமா அதன்
பெயர் செண்பகம் என்று. மைனாவுக்குத் தெரியுமா,கானாங்கோழிக்குத் தெரியுமா?புறாவுக்கு? பஞ்சவர்ணக் கிளிக்குத்தெரியுமா? பறவைகளின் மொழியில் அவற்றின் பெயர் என்னவாக இருக்கும்.? அந்தப் பெயருக்கும் நாம் சூட்டி அழைக்கும் பெயருக்கும் ஒட்டுண்டா,உறவுண்டா? பறவை இனங்கள் தம்முள் வேறுபாடுகளைக் காண அடையாளப் பெயர்கள் வைத்துக்கொள்வதுண்டா? காகம்,குயில்,வால் நீண்ட கரிக்குருவி என நிறத்தால் பேதங்காட்டுமா? எனில் அவற்றுள் வலிந்தவன்,மெலிந்தவன் உண்டா?
அரிய அல்லது எளிய பறவை இனங்கள் உண்டா? பறவைகளில் காகம் அழகற்றது பஞ்சவர்ணம் அழகுசெறிந்தது என்றும் சொல்லப்போமா?அவ்விதம் சொல்வது மனிதப் பார்வை அல்லவா?
அவ்விதம் தமக்குள் வேறுபட்டுப் பார்க்கும் அழகுணர்ச்சி அவற்றுள் இல்லை எனில் அழகுணர்ச்சி மனித குலத்துக்குக் தக்க கொடை என்ன?ஐரோப்பியர் அழகானவர் என்றும் ஆப்பிரிக்கர் அழகற்றவர்என்றும் நம்பும் -தங்களைப் பண்பாட்டுச் சிகரங்களில் உலவுகிறவர் என்று நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மனிதர்களை எங்கு கொண்டு போய் தள்ள?  அழகன் எனும் சொல்லுக்கு எனக்குக் காட்சியாகும் முதல் ஆண் தமிழ் சினிமா நடிகன் அல்ல. மேற்கத்திய பந்து வீச்சாளன் கர்ட்னி வால்ஸ்.
மேற்சொன்ன பறவைகள் எடுத்துக்காட்டை நீங்கள் நடப்பன,ஊர்வன,நீந்துவன,கை கணக்கில்லாத கானுயிர்கள் என பெருக்கிக்கொண்டே போகலாம். மனிதன் மட்டுமே உடையணிதல் போலப் பெயர் அணிந்து கொண்டே போகிறான். தன்னை வேறுபடுத்திக் காட்ட, வேறுபடுத்தி நினைத்துக்கொள்ள பெயர் தேவையாக இருக்கிறது. பெயர் தரித்து தன்னை பிரித்துக் கொள்கிறான். உடைதரித்து பிரித்துக் கொள்வதைப் போல. பெரியார் நிர்வாண முகாமில் மகிழ்ச்சியாக இருந்தார் எனில் அதுஎவ்வளவு பெருமைக்கு உரிய விஷயம்? எவ்வளவு பெரிய விடுதலை உணர்ச்சி? தன்னை அடையாளமற்றுக் கரைத்துக் கொள்ளும் ஆன்மீகநிலை. தயவுசெய்து நினைத்துக் கொள்ளாதீர்கள்.ஆன்மீகம் என்பது விபூதி,குங்குமம்,திருமணம்,களபம்,சந்தணம்,சர்கரைப் பொங்கல்,சுண்டல், வடை என்றெல்லாம். நிர்வாணத்தில் மறைப்பதற்கும் குறைச்சல் கொள்வதற்கும் என்ன உண்டு? ஆடை துறத்தல் என்பது ஆபாசமா?அசிங்கமா? பிறந்த குழந்தை அருவருப்பா? ஏன் நம்மக்கள் -எழுத்தாளர் என்று தம்மை கூறிக்கொள்பவர்கள் கூட கொந்தளித்துப் போகிறார்கள்?
நமக்குத்தான் ராமசாமி வேறு, ராமலிங்கம் வேறு, ராமநாதன் வேறு, ரங்கநாதன் வேறு, ராமச்சந்திரன் வேறு. ராமச்சந்திரன் வேறு இராமச்சந்திரன் வேறு. ராமச்சந்திரன் என்ற போது நகுலன் கேட்டார் எந்த ராமச்சந்திரன் என்று. அதற்கானதோர் வழி முன்னெழுத்து-தகப்பனார் பெயர் அல்லது தாயார் பெயர். பிற வெள்ளமடம் ராமச்சந்திரன் அல்லது குருக்கமடம் ராமச்சந்திரன். அதுவும் ஆகவில்லை என்றால் நாடாக்கமாரா, தேவமாரா, பிள்ளைமாரா,சாம்பாக்கமாரா?அல்லது வாத்தியாரா நெய்துக்காரரா?ஆசாரியா மூசாரியா?ஆசாரி எனில் தங்காசாரியா, கொல்லாசாரியா, தச்சசாரியா,கல்லாசாரியா? அதில் தங்காசாரி மேற்குலம் கல்லாசாரி கீழ்குலமா? அவ்வாறெனில் கையாளும் பொன்னின் விலை அனுசரித்துத்தான் கீழ் அல்லது மேலா? பரதவரில் நெய்மீன் பிடிப்பவன் மேலும் நெத்திலி பிடிப்பவன் கீழுமா? மேல்கீழ் என்னபது எந்த இருசில் இயங்குகிறது?
பெயரணிந்து பிரித்துக்கொண்டே போகிறோம்.ஆண்-பெண்,இந்தியன்-அயலவன், இந்தியன் -தமிழன், தமிழன்-இந்து-இஸ்லாமியன் -கிருத்தவன். இந்துவானால் ஏன் இஸ்லாமியர் கிருஸ்துவரானாலும் என்ன . சாதி இன அடையாளங்கள்..பெயரணிதல் அடையாளப்படுத்த எனில்,அடையாளம் என்பது வகுக்க,பிரிக்க,கழிக்க…கூட்டவோ சேர்க்கவோ அல்ல. அப்படிப் பெயரணிதல் எத்தனை சிக்கல்கள்?
முன்பு குல்தெய்வங்களின் பெயர்களை-சுடலையாண்டி,பழனியாண்டி,இசக்கியப்பன்,முத்திருளப்பன்,முப்பிடாதி,பேச்சியம்மை,மாடத்தி, சிவனி, புட்டாரத்தி (கவிஞர் விக்கிரமாதித்தியனின் புதிய புனை பெயரான புட்டா இதிலிருந்து பெறப்பட்டது) என அணிந்து கொண்டார்கள் அல்லது பாட்டனார்,பாட்டி பெயர்களை-பலவேசம் பரமார்த்தலிங்கம்,வெள்ளையன், செல்லையா,கருப்பையா, காத்தான், கண்ணாத்தா,நல்லாயி,மூக்கம்மை,அன்னம்மை என அணிந்தனர்.
சிலருக்குத்தான் பெயருக்கும் இயல்புக்கும் பொருத்தம் வாய்க்கிறது. எங்கள் கிராமத்தில் பார்ப்பனச் சேரி கிடையாது. பறச்சேரி உண்டு. வெள்ளாங்குடி உண்டு. ஊரைவிட்டு வெகுதூரத்தில் இருந்த எங்கள் வயலுக்கு பறச்சேரியைத் தாண்டித்தான் போக வேண்டியதிருந்தது. தேராகாலின் கரைபோல் அமைந்திருந்த சாலையின் மறுபக்கம் நல்லாயி என்றொரு பாட்டி இருந்தாள். சுருக்கங்கள் விழுந்த முகமும் கை கால்களும். இப்போது இருந்தால் நூற்று முப்பது வயதாகி இருக்கும். எப்போது கண்டாலும் நிறுத்தி வைத்துப் பேசுவாள். “எய்யா,நல்லா வளந்திற்றியே! நல்ல படி என்னப்போ! நீ படிச்சு ஆளாயித்தான் ஒங்கப்பனுக்கு தரித்திரியம் தீரணும்…..போய்யா,போ. வெயிலுக்கு மிந்தி வந்திரு…” என்பாள்.
அப்பா ஒறுவினைக் காலங்களில் ஐந்து மரக்கால் நெல் முன்னறுப்பு வாங்குவதுண்டு அவளிடம். நல்லாயி தோப்பில் தேங்காய் வெட்டி வந்திருந்தால்,கருக்கு வெட்டி வழுக்கைத் தேங்காய் தின்னத் தருவாள். பாம்படம் ஆட,வாயில் அங்குவிலாஸ் புகையிலை மணக்க, சுருக்கம் விழுந்த நீண்ட விரல்களால் முகத்தைத் தடவுவாள். மறுபடியும் நகுலன் –
“நண்பா,அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?”
எனக்குப் பலமுறை தோன்றியதுண்டு – ‘நல்லாயி’ என்ன அற்புதமான பெயர்!
சினிமாவின் தாக்கம் பாதிக்காத துறையில்லை தமிழ்நாட்டில். கோயில்களில் இருந்து படுக்கை அறை சமயலறை வரைக்கும் எனவே பெயர்களும் நவீனமாயின. சுரேஷ்,ரமேஷ்,ராஜா,சேகர்,லலிதா,நளினி,மோகனா,காஞ்சனா,உஷா,ஆஷா,ஷீலா என்பன தமிழ்ப் பெயர்களாயின. பலசமயம் தொலைபேசியிலிருந்து ஒலிக்கும் குரல் வயதை ஏமாற்றிவிடுவதுண்டு. சினிமாவைப் பார்த்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு ஷீலா என்று பெயர் சூட்டினார்கள்.  இன்று தமிழ் -மலையாள இளைஞ்ர்களிடம் அந்தப் பெயர் தரும் அர்த்தம் என்ன?
அன்று ஆசையாகச் சூடிய அல்லது சூட்டிய பெயர்கள் இன்று சுமக்கக் கடினமாக இருக்கிறது பலருக்கும். எனது மும்பை நண்பர்,தமிழ் சுமந்து திரிகிறவர். தமது பையனுக்கு முகிழ்நன். என்று பெயர் சூட்டினார். தினமும் எத்தனை முறை கூப்பிடவேண்டும். நாவிற்கு கடினமான பயிற்சி வேண்டுமெனில் ஙகரத்தில் பெயரை ஆரம்பிக்கலாம். எனக்கு மலைப்பாக இருக்கிறது.
வடமாநிலங்களில் துணைப்பெயர் என்று ஒன்றிருக்கும் சாதியை அல்லது குழுவை அல்லது பரம்பரையைக் குறிப்பதாக. சுரேஷ் பிரபாகர் ப்ரதான் என்ரால் சுரேஷ் என்பது பெயர்.  பிரபாகர் என்பது தகப்பனார் பெயர். ப்ரதான் என்பது சாதியின் பாற்பட்ட குழுப்பெயர். மராத்தியத்தில் இவர்களை CKP என்பார்கள். அதாவது சந்த்ரசைன்ய காயஸ்த ப்ரபு. அதுபோல GSB  எனவோர் பிரிவும் உண்டு. செளட் சாரஸ்வத் ப்ராமண். இவர்களின் பெயர்கள் பட்கர்,நாயக்,ப்ரபு என முடியும். CKP பெயர்களோவெனில் ப்ரதான்,சிட்னிஸ்,  தேஷ்பாண்டே என முடியும். சிவசேநாவின் ஸ்தாபகர்,தலைவர்,பாபா சாகேப் தாக்ரே CKP எனச்சொல்வார்கள். இது துணைப்பெயரை வைத்துக்கொண்டு சாதியை அறிய. சான்றிதழ்கள்கூட எஸ்.பி.ப்ரதான் என்றுதான் இருக்கும்.
மிஸ்ரா,சுக்லா,திரிபாதி,சதுர்வேதி,துவிவேதி என்றால் பிராமனப் பெயர்கள் என்று உலகறியும். மராத்தியிலும் அதே கதைதான். குல்கர்னி,அம்பேகர்,நட்கர்னி,நர்லிகர்,நார்வேகர்,ஷிண்டே,பாண்டேகர்,தாண்டேகர்,ராணே,காம்ப்ளே என்றால் சாதியைப் புரிந்து கொள்வார்கள். மகாத்மாபுலே பாபா சாகேப் அம்பேத்கார் காலத்துக்குப் பிறகு பெயரில் சாதி அடையாளம் மறுக்கப்படவேண்டும்  என்பதற்காக எல்லாச் சாதியினரும் காம்ளேளே,நட்கர்னி,ஷிண்டே,கார்பாரே,மாணே என பெயர் வைத்துக்கொண்டனர். ஆனால் அது பெரிய அளவில் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.
மும்பையில் சால் ஒன்றில் தனியன்களாக நாங்கள் நாலைந்து பேர் வாழ்ந்தபோது,பாபா அணுமின் நிலையத்தில் பயிற்சிக்காக வந்த செட்டி நாட்டுக்காரருக்கு தங்க இடம் கொடுத்தோம். தீவிரமான திராவிட இயக்கத்துக்காரர். அவரது மனைவி அப்போது நிறைமாதம். ஆண் குழந்தை பிறந்த தகவல் வந்தபோது மேற்சொன்ன விவரங்களை எல்லாம் விவாதித்தோம். அன்று விளையாட்டுப்போல தீர்மானிக்கப்பட்டது, ‘வெங்கடாச்சாரி’ என்று பெயர் வைப்பதாக. அப்போது நினைத்தேன் அவரது மனைவி,தாய் தந்தையர்,மாமனார்,மாமியார்,அண்ணன் தம்பிகள்,அக்கா தங்கைகள், தாய்மாமன்மார், சித்திகள்,பெரியம்மைகள்,சித்தப்பா,பெரியப்பாக்கள் என எத்தனை பேர் கூடி நடத்துவார்கள் பெயரணி விழாவை, நடக்கிற காரியமா இதெல்லாம் என்று.  பின்பு மறந்தும் போனேன். போன ஆண்டு அலுவலாகக் காரைக்குடி போனபோது,தேடிப்பிடித்து அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். விடுதிக்கு என்னைப் பார்ர்க வந்தபோது இருபத்தேழு வயதிலோர் வாலிபன் உடனிருந்தான்.”பெயரென்னப்பா” என்றேன்.
“நினைவில்லையா?வெங்கடாச்சாரி” என்றார் .உண்மையிலேயே பையன் பெயர் இராம.வீர.வெங்கடாச்சாரி.
பள்ளிச்சான்றிதழில்,பட்டப்படிப்பு- பட்ட மேற்படிப்புச் சான்றிதழ்களில் என் பெயர் க.சுப்பிரமணிய பிள்ளை. 1972ன் இறுதியில் மும்பை சென்றதும் முதலில் பிள்ளையை வெட்டினேன். இன்ரு ஆயுள் காப்பீட்டு கழகத்தில் ,வங்கிக் கணக்குகளில்,தொழிலாளர் வைப்பு நிதியில்,வாடிக்கையாளர்களிடத்தில் எங்கும் எதிலும் எனக்கு ‘பிள்ளை’ பட்டம் கிடையாது.பிறப்பால் வேளாளன்தான். ஆனால் வேளாளனாக வாழவில்லை நான். வேளாள மதிப்பீடுகள் என்னுள் கரந்து உறையலாம். நல்லதற்கோ கெட்டதற்கோ எப்போதாவது வெளிப்படவும் செய்யலாம்.எனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத விஷயம் அது. எனது எழுத்து வெள்ளாளர் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்றால்
அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாற்பத்தைந்து ஆண்டுகளாக-இந்தக் கட்டுரை அடங்கலாக -ஊற்றுப்பேனாவில்தான் எழுதுகிறேன் என்பதைப்போல அது. ஆனால் நவீன இலக்கியத் திறனாய்வு,” என்னத்தைத்தான் சொல்லு….நீ வெள்ளாளந்தான்…..உன் எழுத்தும் வெள்ளாள எழுத்துதான்” என்கிறது. தாயையும் தந்தையையும் இனி மாற்றிக்கொள்வது என்பது சாத்தியமில்லை.எனது சாதியில் எப்போதும் எனக்கோர் நாற்காலிப் பதிவு கிடையாது.சாதியில் பதிவு என்பது எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ,பெரிய அதிகாரிகள்,நிலக்கிழார்கள்,சிறு தொழில் அதிபர்கள்,வியாபாரிகள் முதலியோருக்கு. அவர்களுக்கு நான் கோடாரிக்காம்பு. ஆனால் நவீன இலக்கியத் திறனாய்வு சொல்கிறது,”இல்லையில்லை….நீ வெள்ளாளனேதான். அதுல ஒரு மாற்றமும் கிடையாது. மடங்கிப்  போ..” என்று.  எனக்குக் கேட்கத்தோன்றுகிறது,பிரித்துக் கொண்டே போவோமா-பட்டிகைச் சாதி எழுத்து,மலைசன எழுத்து,மீனவ எழுத்து,இந்து எழுத்து,நாடார் எழுத்து,தேவர்,பிள்ளைமார்,செட்டியார்,கவுண்டர்…..விடுபட்ட சாதியினர் மன்னியுங்கள்.
நாகர்கோவிலில் அமைச்சர் முன்னிலையில் ஓராண்டு முன்பு எனக்கோர் விருது வழங்க முன் வந்தார்கள்.ஏற்றுக்கொள்ள முடியாது என்றெழுதினேன்.ஆனால் தாய்தந்தை வைத்த பெயர் தெரியும் காரணத்தால் என் மேல் விழுந்த குற்றச்சாட்டு,வெள்ளாளச் சாதி வெறி பிடித்தவன் என்பது.’கழுத்தில் விழுந்த மாலை,கழற்ற முடியவில்லை,சகியே!’
தப்பித்தவறி பிள்ளை என்று பெயரில் வைத்துக்கொண்டால் ஏகப்பட்ட கேள்விகள் எதிர்ப்படும்.ஆனால்மேத்தா,ஜெயின்,அகர்வால்,ராவ்,நயுடு,கான்,கெளடா,கோன்சான்வாஸ், பெர்னாண்டோ,தாக்கூர்,சென்,சென்குப்தா,யாதவ்,ஜாதவ்,சிங் என்று துணைப்பெயர் கொண்டவர்களிடம் இந்தக் கேள்வியை யாரும் கேட்பதில்லை.
தமிழ்நாட்டுத் தலைவர்கள் எல்லாம் சாதியை ஒழிக்க வேண்டி பெயர்களில் சாதி துறந்தார்கள். இராஜகோபாலாச்சாரியார் இராசாசி என்றும் காமராஜ நாடார் காமராசர் என்றும் மா.பொ.சிவஞானகிராமணியார் மா.பொ.சிவஞானம் என்றும். ஆனால் பிற மாநிலத்தவருக்கு அந்தக் கவலை இருக்கிறதாவெனத் தெரியவில்லை. அல்லது அவர்கள் பெயரில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். இல்லையென்றால் இன்றும் எப்படி பிரணாப் முகர்ஜி,மம்தா பானர்ஜி,ஜோதி பாஸூ,சுர்ஜித் சிங் பர்னாலா,அசோக் மேத்தா,ஜெய்பால் ரெட்டி,சந்திரபாபு நாயுடு,லல்லு பிரசாத் யாதவ்,முலாயம் சிங் யாதவ்,ஜெயில் சிங்,பூட்டா சிங்,பாபா சாகேப் தாக்ரே,யஷ்வந்த் ராவ் சவாண்,ஷரத் பவார்,பஜன் லால்,தேவி லால்….. பக்கங்கள் நிறைந்துவிடும். அவர்களிடம் எங்ஙனம் நம்மவர்கள் நட்புறவும் நல்லுறவும் கொள்கிறார்கள்?
இங்கு எந்தமிழர் இஸ்லாமியப் பெயர் என்றோ கிறித்துவப் பெயர் என்றோ பேதம் பார்க்காமல் அப்பெயர்களைச் சூடினார்கள்.நேரு,காந்தி,ஸ்டாலன்,லெனின்,போஸ்,இந்திரா,
கென்னடி,லிங்கன் எல்லாம் நம்மவர் தேசப்பற்றையும் கொள்கைப் பற்றையும் காட்டச் சூடிய பெயர்கள்.வடநாட்டில் சிதம்பரம்,ராஜகோபாலன்,ராமசாமி,குமரன்,சரோஜினி,
முத்துலெட்சுமி,முத்துராமலிஙகம்,சின்னமலை,பூலித்தேவன்,
வைத்யநாதனைக் காட்டுங்கள் எனக்கு.
முன்பு அப்துல்காதர் என்ற வெள்ளைச்சாமி என்றொரு ராமநாதபுரத்துச் சட்டமன்ற உறுப்பினர் இருந்தார்.தமிழ் சினிமாவில் ஹாஸன்களை நாமறிவோம். நன்றி பாராட்டலின், நட்பின் அடையாளமாகப் பெயரணிவித்தனர். எனது நண்பர் ஒருவர்-அந்தோணிராஜ் என்று பெயர். அவர் இந்து கம்மவர் நாயக்கர். தமிழ் சினிமாவும் வணிக இதழ்களும் முனியன்,குப்பன்,சுப்பன்,மாடசாமி,பக்கிரி என்றது வேலைக்காரர்களை,பால்காரர்களை,வண்டி இழுப்பவர்களை,
‘முனியம்மா’  என்றது வேலைக்காரிகளை. இங்கு நான் முனியம்மாவுக்கு மேற்கோள் குறி இடுவதன் நோக்கம்-திரும்பத்திரும்ப வணிக இதழ்களும் தமிழ் சினிமாவும், உதிரித்துணுக்குகளும் வேலைக்காரிகளை முனியம்மா என்றழைப்பதை ஓர்மைப்படுத்த. இதுபோல் ஒரு வரி முன்பு நான் ‘உயிர்மை’ முதலாமாண்டுச் சிறப்பிதழில் எழுதிய மங்கலம்,குழுஉக்குறி,இடக்கரடக்கல் கட்டுரையில் வந்தது. வரிகளை அப்படியே தருகிறேன். “ஆனால் வயலில் களை பறிக்கிறவர்கள்,சிற்றாள்கள்,செங்கற்சூளைப் பணிப்பெண்கள்,தமிழ் சினிமாக்களும் வாராந்திரத் துணுக்குகளும் சித்தரிக்கும் ‘முனியம்மா’க்கள்,பூக்காரிகள்,கீரைக்காரிகள்,தொழிலாளிகள், கூறுகட்டிக் காய்கறி விற்போர், ஓய்வுபெற்ற பாலியல் தொழிலாளிகள், ஆதிவாசிகள் எல்லோரும் என்ன செய்வார்கள்?பட்டினத்தடிகளுக்கு அவர் பற்றி எல்லாம் அக்கறையுண்டா?”
என்னூடைய போதாத காலம் பாருங்கள்-நான் மதிக்கும் பேராசிரியர், நான் ஈடுபட்டு வாசித்த ஆய்வு நூல்களை எழுதியவரின் எதிர்வினை,அப்படியே,சொற்பிசகாமல்: ‘முனியம்மா’ என்பது ஒரு தலித் பெண் எழுத்தாளரின் புனைபெயர். தேவையின்றி மேற்கோள் குறியிட்டு அப்பெயரைக் குறிப்பிடும் நாஞ்சில் நாடனின் நோக்கம்தான் என்ன?
(தொடரும்)
(நன்றி தட்டச்சு உதவி: பாலா, சிங்கப்பூர்)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பெயரணிதல்

  1. வல்லம் தமிழ் சொல்கிறார்:

    ஒரு நல்ல எழுத்தாளன் தான் எதை சொன்னாலும் அதை பிறர் ஏற்றுக்கொள்ள செய்து விடுவான்.நாஞ்சில் நாடனின் வெள்ளாள வாதம் அவரை ஒரு நல்ல எழுத்தாளராக அடையாளப்படுத்துகிறது,அவ்வளவு தான்.

  2. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு. உங்கள் பதிவை படிக்கும்போது நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறேன்.
    நன்றி ஐயா.

  3. rajagopalan சொல்கிறார்:

    mika mika nandru.

  4. Naga Sree சொல்கிறார்:

    கவலைப்பட வேண்டாம்! திறமையற்றவர், முட்டாள்கள் செய்யும் அரசியல்

பின்னூட்டமொன்றை இடுக