சகுனம்

நாஞ்சில் நாடன்
 ன்மை, தீமைகளை முன்கூட்டிச் சொல்லும் அறிகுறிகள் எனச் சிலவற்றைப் பாவித்து அதனை சகுனம் என்று கூறினார்கள். அதை நிமித்தம் என்பார்கள். சகுனங்களைக் கணித்துப் பொருள் கூறுவோரை நிமித்திகன் என்பதுண்டு. சகுனம், நிமித்தம் என்பதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் என்ன என்று யோசித்தால், வெறுமையானதோர் வெட்டவெளிதான் கண் முன் பரந்துகிடக்கிறது.
ஆனாலும், காலங்காலமாக சகுனம் என்பது இந்திய மனோபாவத்தினுள் வெகுவாக ஆட்சி செய்து வருகிறது. மனம் நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது, அதற்கான உறுதியாக, நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், தீயவை நிகழ்ந்துவிடக் கூடாது என்ற அச்சம் காரணமாக, நற்சகுனம், அபசகுனம், சகுனத் தடை போன்றவை மக்கள் மனங்களை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்க வேண்டும். 
ஒரு சகுனம் நல்லது எனில், அது உலக மாந்தர் அனைவருக்கும் நல்லதாகவே இருக்க வேண்டும் அல்லவா? தீ சுடும் என்பது சகலருக்கும் பொதுவிதியாக இருப்பதைப் போல!
ஆனால், அவ்வாறு இல்லை. இனம், மதம், மொழி, பிரதேசம் பொறுத்து சகுனங்கள் மாறுபடுகின்றன. இந்தியச் சகுனம், ஆப்பிரிக்கச் சகுனம், சீனச் சகுனம் என்பவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. இந்த விசித்திரம் நமக்குப் புலனாவதில்லை. திருமணமாகாத பெண் ணுக்கு செவ்வாய் தோஷம் என்பது கிறிஸ்துவத்திலோ, இஸ்லாத்திலோ இல்லை.
‘வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடமானால் கால் நடையாய்ப் போனவரும் கனகதண்டி ஏறுவரே’ என்பது பழம் பாடல். அதாவது இரண்டாகப் பிளந்து-இருக்கும் நீண்ட வாலை உடைய கரிக்குருவி, வலப் பக்கத்தில் இருந்து இடப் பக்கம் பறந்தால், கால் நடையாகப் பயணம் மேற்கொண்டவரும் பல்லக்கில் ஏறித் திரும்பி வருவார்களாம்.
எனது 35 ஆண்டு காலப் பயணங்களில், கிராமத்து வண்டித் தடங்களில் பல முறை கரிக்குருவி வலமிருந்து இடமாகியதுண்டு. இதுவரை படகையும் காணோம், பல்லக்கையும் காணோம். 
பக்கத்து ஊருக்கு நடந்து பயணம் போகிறவர்கூட சகுனம் பார்ப்பது கிராமத்து வழக்கம். அதை ‘எதிர்ப்-புப் பார்த்தல்’ என்கிறார்கள். ஒற்றைப் பிராமணன், எண்ணெய்க் குடம், எண்ணெய் வாணியன், பூனை, எமனின் வாகனமான எருமைக் கடா, அறுதலி அல்லது முண்டச்சி என்று தூற்றப்பட்ட விதவை, யாவும் அபசகுனங்கள். நடை இறங்கும்போது இவை எதிர்ப்பட்டால், பலர் வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். கால் இடறுவது என்பதாவது அசிரத்தை காரணமாக ஏற்படுவது. செய்யும் காரியத்தில் கருத்தாக இருக்க வேண்டும் என்று கருதி, வீட்டுக்குத் திரும்பி, ஒரு மடக்குத் தண்ணீர் குடித்துவிட்டுப் போவதை ஒரு மனச் சமாதானமாகச் சொல்ல-லாம். மற்றபடி நல்ல அல்லது கெட்ட சகு-னத்தை எப்படிப் புரிந்துகொள்வது? நிறைகுடம், சுமங்கலி, பசு, கன்று, கழுதை, பிணம் சுமந்த பாடை, வண்டிக் காளைகள் இவற்றை நற்சகுனங்கள் என்று கருதினார்கள்.
இன்றும் தூரா தொலைக்குப் பயணம் புறப் படும்-போது, வீட்டின் படி இறங்கும்போது, சுமங்கலிப் பெண்களை எதிரே வரச் சொல்வார்கள். கல்யாணப் பெண்ணோ, மாப்பிள்ளையோ பயணம் மேற்-கொள்-ளும்போது, வாடகை காருக்கு நற்சகுனமாக தண்ணீர்க் குடம் சுமந்த சுமங்கலிப் பெண்ணை எதிரே வரச் சொல்வார்கள். தற்செயலான நிகழ்வுதானே சகுனம் எனப்படுவது? வலிந்து வரச் செய்வது என்ன சகுன இலக்கணம் என்று தெரியவில்லை. பெரும்பாலும் அச்சம் மூல காரணமாக இருக்க வேண்டும். 
அபிதான சிந்தாமணி என்கிற நிகண்டு வித்வான்கள், பத்தினிகளோடும் புத்திரர்களோடும் வரும் பிராமணர், ஆபரணம் பூண்ட மாதர், அழகி, கர்ப்பிணி, கன்னிகை, விளையாடும் குழந்தைகள் யாவும் நல்ல சகுனம் என் கிறது. பானம், மாமிசம், தீபம், சந்தனம், மாலை, நெல், தயிர், மீன், பூரணகும்பம், நிறைகுடம், சங்கு, கோரோசனை, கண்ணாடி, கொடி, கடுகு, பால் இவற்-றைக் காண்பது நற்சகுனம் என்கிறது. பிரயாணத்-தின்போதும் சுப காரியங்களின்போதும் இடப் பாகத்-தில் மூஞ்சூறு, குள்ளநரி, பல்லி, பிங்கள நிறத்திலான பன்றி, குயில் இவை யாவும் நன்று என்கிறது. 
அபசகுனங்கள் என்று பசுவின் தும்மல், இரவில் சஞ்சரிக்கும் பறவைகளான ஆந்தை, கூகை பகலில் தென்படுவது, பகலில் சஞ்சரிக்கும் பறவைகள் இரவில் தென்படுவது முதலியன என்றார்கள். சோகத்தைக் குறிக்கும் சகுனங்கள் என வெல்லம், எலும்பு, கறுப்புத் தானியம், பருத்தி, தீப் பிடிக்கும் பொருள்கள், விறகு, விரிந்த தலைமுடியுடன் கூடியவள், சண்டை, பசியும் இளைப்பும் உடையவன், மொட்டைத் தலை, கந்தல் உடுத்தியவன், விகாரமானவன், நாத்திகன், பௌத்தன், குரலெடுத்து அழுதல், கண்ணீர் சொரிதல், கலகம், பன்றி, எருமை, ஒட்டகம், இவற்றைப் பார்த்தல் என்பவற்றைச் சொல்கிறது.
அண்டங்காக்கைகள் நல்ல சகுனம் என்றும் நதியைக் கடக்கும் பறவை தீய சகுனம் என்றும் சொல்கிறது.
இரவில் வீட்டுக் கூரையின் மேல் ஆந்-தையோ, கூகையோ அமர்ந்து கத்தினால் அது மரணத்துக்கான சகுனம். நள்ளிரவில் அழுவது போல் நாய் ஊளை இட்டாலும் அதுவே. 
அடுப்பு சிரிப்பது, தோசைக் கல் சிரிப்பது என்று கேட்டதுண்டா? விறகு அடுப்பின் ஓரத்தில், தோசைக் கல்லின் அடியில் கரித்-துகள்கள் சில சமயம் பொன்துகள் போலத் தீயில் மின்னும். அதை அடுப்பு சிரிக்கிறது என்பார்கள். விருந்து வருவதற்கான சகுனம் அது. வீட்டு வாசலில், கூரையில், காகம் கரைந்தாலும் விருந்து வரும் என்றார்கள். 
‘காலம்பற அடுப்பு சிரிச்சதுமே நெனச்சேன். இன்னிக்கு யாரோ விருந்து வர்றாங்கன்னு!’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்கள் பெண் கள். 
நெல்பயிர் செய்யும்போது, மொத்த வயற்-காட்டுப் பத்திலும் ஏதோ ஒரு வயலில் பயிர் அமோகமாக விளைந்து பொலி காணும். அதனைச் சாவு பயிர் என்றனர். அந்த வயற்காரருக்கு மரணம் சம்பவிப்பதற்கான சகுனம் அது. அது போல் சில வயல்களில், ஒரு சில நெற்கதிர்களில், நெல் பொரி போல் கனத்து, வாய் பிளந்து, சாம்பல் பூசி நிறத்துடன் காணப்படும். அதை நெல்லுப் பழம் என்றும் நெல்லுப் பழம் காண்பது நல்ல சகுனமல்ல என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். 
மழை வருவதற்கான சகுனங்கள் உண்டு. உழவின்போது ஏரில் கட்டிய எருது பல்லைக் காட்டிச் சிரித்தால், மாக்கிறித் தவளைகள் கத்தினால், குளத்தில் மீன்கள் துள்ளித் துள்ளி விழுந்தால், கூட்டம் கூட்டமாகத் தட்டான் பூச்சிகள் பறந்தால், ஈசல் பறந்தால் மழை பெய்யப் போவதன் சகுனம் என்றனர். பருவ காலங்களில் தூக் கணாங் குருவிகள் கூடு கட்டும்போது வாசல் அமைக்கும் திசையில் மழை அடிக்காது என்றனர்.
ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே
நீர்ப்படும் சொறித்தவளை கூப்பிடுகுதே
என்பது முக்கூடற் பள்ளு. மழைக்கான சகுனம் அது.
பல்லி விழுந்த பலன்கள் என்று முன்பெல்லாம் காலண்டர்-களில் அச்சிடப்பட்டு இருக்கும். அவையும் சகுனத் தொடர்புடை-யவை. சில சேதிகள் பேசிக்கொண்டு இருக்கும்போது, சுவரில் பல்லி கொட்டினால் காரியம் நடப்பதற்கான சகுனம் அது. எவரும் தும்மினால் அப்போது கெட்ட சகுனம். மணி அடித்தால் நல்ல சகுனம்.
தற்செயலாய் குங்குமம் சிந்தினால், நல்ல சகுனம். கடுகு சிந்தினால், தீய சகுனம். புளிய மரங்களின் காய்ப்பு நன்றாக இருந்தால் செழிப்பு, மாமரங்களின் காய்ப்பு நன்றாக இருந்தால் பஞ்சம். கிராமத்துச் சொலவடை- பொங்கும் காலம் புளி, மங்கும் காலம் மாங்காய். 
நாக்கில் கருமை படர்ந்திருப்பவரை ‘கருநாக்கு’ என்றனர். அவர் சொன்னால் அது பலிக்கும் என்று நம்பிக்கை. புதிதாய் மணமான மணமக்களை, கருநாக்குக்காரரை அழைத்து வந்து, அவர் கையில் வெற்றிலை, பாக்கு, பழம், தட்சணை கொடுத்து, நல்வாக்கு சொல்லி வாழ்த்தச் சொல்வார்கள் ஐம்பதாண்டுகள் முன், நாஞ்சில் நாட்டில்.
அறுத்தடிப்புக் களத்தில் கூம்பு போலக் கூட்டப்பட்டு இருக்கும் நெற்பொலியில் மாடு வாய் வைத்தால், தீய சகுனம். நல்ல காரியம் பேசும்போது, அசந்தர்ப்பமாகப் பேசுபவனை, ‘நிறை பொலியில் மாடு வாய் வைத்தது போல’ என்பார்கள் இன்னும். பொங்கலின்-போது, பொங்கற்பானை கிழக்கில் பொங்கினால் நல்ல சகுனம். பால் காய்ச்சும்போது பொங்கி வீணா-னாலும் கிழக்கில் பொங்கி-னாலும் வீடு செழிக்கும் என்று நிமித்தம் சொன்-னார்கள். 
பனங்கைகள் அல்லது மூங்கில்கள்களால் கட்டப்–பட்ட ஓட்டு அல்லது ஓலை வீடுகளில், குளவி கூடு கட்டினால் அதை உடைப்பதில்லை. வீட்டுப் பெண்கள் கருவுறுவதற்கான சகுனம் அது. 
வீட்டின் பின்புறமோ, முன்புறமோ, வாழை மூடுகள் இருக்கும். வீட்டுக் குப்பையும் கழிவு நீரும் உண்டு செழித்து வளரும். அந்த வாழை வடக்குப் பக்கம் பார்த்துக் குலைத்தால் நல்ல சகுனம் என்றார்கள். 
கழுதை கத்தினால் நல்ல சகுனம்; கழுதையின் முகமே நல்ல சகுனம் என்று சில காலம் முன்பு மும்பையில் வீடு-களில் இரட்டைக் கழுதைகளின் படம் சட்டமிட்டு மாட்டப்பட்டு இருந்தன. 
தமிழ்நாட்டில் திருநங்கைகளை அருவெறுத்து ஒதுக்கு-வார்கள். மார்வார்களும் பனியாக்களும் அவர்களை அழைத்து வந்து, பிறந்த குழந்தையை அவர்கள் கையில் கொடுத்து மத்தளம் கொட்டி ஆடிப் பாடச் செய்வார்கள். ஆரவாரித்துக் களித்து பணமும் பண்டமும் கொடுத்து அனுப்புவார்கள். திருநங்கைகள் அவர்களுக்கு நல்ல நிமித்தம். 
பார்சிகளுக்கும் ஜெயின்களுக்கும் புறாக்கள் நற்-சகுனம். பார்சிகளின் தீக் கோயில்களின் முன்பும் ஜெயின் மந்திர்களின் முன்பும் முற்றங்களில் ஆயிரக்-கணக்கான புறாக்கள் மேயும்.
‘விஷ§க்கணி’ மலையாளிகளுக்கு நல்ல சகுனம். நாள் மிகக் கெட்டதாக அமைந்துவிட்டால், ‘இன்று யாரைக் கணி கண்டேனோ?’ என்று சலித்துக்கொள்வது உண்டு. நாமும் சொல்வோம் ‘இன்று யார் முகத்தில் விழித்-தேனோ?’ என்றும் ‘யார் எதிர்ப்பில் புறப்பட்டேனோ?’ என்றும்.
 
கனவில் வரும் மரணங்களும் திருமணங்களும் எதிர் பொருள் தருபவை, சகுன இலக்கணத்தின்படி. 
என்றாலும் அத்தனையும் தாண்டி, நல்ல சகுனத்தில் போனவன் தேர்வில் தோற்கிறான், விபத்தில் அடிபட்டுச் சாகிறான். கருவுறும் பருவம் தாண்டிய பெண் வாழும் வீட்டில் இன்றும் குளவி கூடுகட்டுகிறது. நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புப் பால்கனிகளில் காகங்கள் கரைவது இல்லை. விருந்து வருவதை, சீரியல் ஓடும் நேரத்தில் யாரும் விரும்புவதும் இல்லை. 
யாருக்கும் ஆந்தையும் தெரியாது, கூகையும் தெரியாது. நான் பார்த்த கடைசிக் கூகை, சோ.தர்மனின் நாவல் தலைப்பு.
சகுனங்கள் என்பன சபலமுற்ற மனத்துக்கு உறுதியா, முடிவு எடுக்க முடியாதவன் தேற்றமா, இயற்கை தானாகச் செய்யும் முன்மொழிதலா, அல்லது ‘மொறட்டுக் கம்புக்குக் கறட்டுக் கோடாலி’ என்பது போல் ஒரேடியாக மூடநம்பிக்கையா? என்றாலும் பழம் பஞ்சாங்கமும், பகுத்தறிவுப் பாசறையின் பங்குதாரரும் சகுனம் பார்க்-கிறார்கள். வாஸ்து பார்த்துத்தான் வீடு கட்டுகிறார்கள். நிறங்கள் தேர்ந்து சால்வை அணிகிறார்கள். 
வால் நட்சத்திரங்கள், எரி நட்சத்திரங்கள், சந்திரனைச் சுற்றிக்கிடக்கும் வளையங்கள், கொத்திப் பறித்த வயல் போல் மேகம் கிடக்கும் வானம் எல்லாம் இயற்கை காட்டும் சகுனங்களா அல்லது தற்செயல்களா?
நல்லதோ கெட்டதோ! சக மனிதருக்கும் நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் தீங்கு நேராத வரைக்கும் அவரவர் சகுனம் அவரவர்க்கு.
ஆனால், மின்சாரமே இல்லாமல், ஒரு வேளைக்கே சரியான உணவு கிடைக்காமல், ரசாசயன வாயுக் குண்டு வீச்சிலும், ஷெல் அடித்தும், பட்ட காயத்துக்கும் மருந்து இல்லாமல், போகும் வழி தெரியாமல் விம்மி, விம்மி விம்மி அழும் எமது ஈழத்து உடன்பிறப்புக்களுக்கு நல்ல சகுனம் எது, எங்கே, எப்போது?

 5.11.2008

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to சகுனம்

  1. radhakrishnan சொல்கிறார்:

    avaravavar sagunam avaravarukku.exactly correct we can not and need not impose
    any adverse observations and mock at others sentiments .we commonly see instances
    viz. oorukku upadesam unakku illai enbadhu.let each use their own commonsence
    and realize their folly in following sagunam strictly.

  2. இளமையிலிருந்தே வழியில் ஒத்த மைனா பார்த்தா நல்லதில்ல, ரெட்ட மைனா பார்த்தா நல்லதுன்ற எண்ணம் இன்றும் தொடர்கிறது. இது போல சில சகுனங்கள் நம்மை அறியாமலேயே மனது நம்ப தொடங்கி விடுகிறது. இக்கட்டுரையின் இறுதியில் உள்ள வரிகள் தான் இதயத்தை உலுக்கி கொண்டேயிருக்கிறது. எப்படியும் இறைவன் கைவிட்டாலும் இயற்கை கைவிடாது என்று நம்புவோம். விரைவில் ஈழத்து சகோதரர்களுக்கு நல்லது நடக்கும் ! நம் நம்பிக்கை நடத்தி வைக்கும்.

  3. V.BHASKAR சொல்கிறார்:

    நான் முக்கியமான விஷயம் பேசிக்கிட்டு
    இருக்கும்போது மட்டும் பல்லிஅடிக்கடி
    சுவற்றில் இருந்துக்கிட்டு கத்துகிறார்.
    திசை தெரியாது.
    இதன் பலன் அர்த்தம் என்னை?
    கடந்த இரண்டு வாரமாக நடக்கிறது.

  4. J.Patrick சொல்கிறார்:

    நல்ல பதிவு..பரவலான கருத்துக்களை தொகுத்து எளிமையாக இணைத்துள்ளார் ஆசிரியர். அருமை

  5. seethalakshmi சொல்கிறார்:

    Enathu santhegam kovili thaliyli nerupu pedipathu enna sagunam

பின்னூட்டமொன்றை இடுக